Wednesday, December 22, 2021

Apasthambha Grihya Sutras - PArt - II

 சாஸ்திரத்தில் பெண்களுக்கு மறுமணம் உண்டா ?

இல்லை. கணவனும் பத்னியும்  ஈருடல் ஓருயிர் என்னும் படியால் - கணவன் காலத்திற்கு அனந்தரம்   மனைவி கைம்மை நோன்பு பூண்டு பின்பு பதி லோகத்தில் கணவனுடன் சேர்ந்து இன்புறுவாள். அதே விதவை அபுத்ரவதியாக இருந்தால் - கணவனின் அண்ணன் தம்பியர் அவளுக்கு சந்தானார்தம் கர்பாதானம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது சாஸ்திரம். 

சாஸ்திரத்தில் ஆணுக்கு மறுமணம் உண்டா ?

தன்னுடைய வம்சோதாரகனாய் புத்ரனை தர முடியாவிட்டாலோ, மனைவி - சொன்ன பேச்சு கேளாமல் இருந்தாலோ - ஆணுக்கு மறுமணம் செய்யும் உரிமை உண்டு. அதே போல மனைவி மரணித்தால் - அக்னி கார்யங்கள் வேள்விகள் செய்யும் பொருட்டு ஆண் இன்னொரு மணம் செய்யலாம் ( வேள்விகளை செய்யும் பக்ஷத்தில்).

கல்யாண செலவில்  பாதியை ஆண் வீட்டார் கொடுத்தால் தப்பா ?

வேதோக்தமாக - சமஸ்காரங்கள் பண்ணி கன்னிகா வரணம் செய்யும் ஸ்நாதகன் - எக்காரணத்தாலும் பணமோ, பொருளோ, பொன்னோ கொடுத்து விவாஹம் செய்தல் கூடாது - அப்படி செய்தால் அது பெண்ணை பணம் கொடுத்து வாங்குவதை போல ஆகி விடும் - அதனை ராக்ஷச விவாஹம் என்பார்கள். (மிலேச்சர்கள் பொன் கொடுத்து பெண் கட்டுவார்கள்.)

ஆண்கள் வரதக்ஷிணை வாங்கலாமா?

கூடவே கூடாது. நல்ல குடும்பத்தில் பிறந்த வதுவை - பெரியவர்களை அனுப்பித்து வரித்து - பிறகு தரும ப்ரஜார்த்தம் - அதாவது நல்ல பிள்ளைகளை பெறுதல் பொருட்டு - சாஸ்திரங்களை அனுசந்தானம் செய்து ஸ்வாத்யாய பரனாக இருத்தல் பொருட்டு மட்டுமே விவாஹம் - இதில் பணம், காசு, இலஞ்சம் .. இவற்றுக்கு இடமே இல்லை. கன்னிகையின் தந்தை தன் சக்திக்கேற்ப வதுவை பொன்னாலும், பூவிலும் அலங்கரித்து - வரனை தன் மகளை காக்க வந்த மஹாவிஷ்ணுவாக பாவித்து பெண்ணை கொடுத்தல் உத்தமம்.

ஜாதகம் பார்த்தல்,பெண்பார்த்தல் சொஜ்ஜி பஜ்ஜி - இவற்றின் முக்யத்வம் என்ன ?

ஆபஸ்தம்பர் சொல்லும் பொழுது -  மூன்று விதமான விதைகள், அக்னி  ஹோத்ர வேதியின் மண், விவசாய பூமியின் மண் , பசு மாட்டு சாணிமற்றும் மயானத்தின் மண்  - ஆகியவற்றை வைத்து ஏதேனும் ஒன்றை தொட சொல்ல வேண்டும் . மயானத்தின் மண்ணை தொட்டால் - விவாஹம் செய்தல் கூடாது. வேறு எதனை தொட்டாலும்  - விவாஹம் செய்யலாம் . எனவே வைதிக விவாஹத்தில் - சொஜ்ஜி, பஜ்ஜி, மாப்பிள்ளை அழைப்பு, வர தக்ஷிணை எல்லாமே நிஷித்தம் என்று புரிந்து கொள்ளுதல் வேண்டும்.


No comments: